அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக தவிர்க்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து கட்சித் தலைவர் விஜயகாந்த் முடிவெடுப்பார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திமுக தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டியும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதிநீரை கர்நாடக அரசு திறக்கக் கோரியும், விளைநிலங்களை அழித்து வரும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்தும் என்னுடைய ஆணைக்கிணங்க தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணி அளவில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.