Skip to main content

''பணம் குறையுது சார்'' - ''அமைதியாக இருங்க... பெரிசு படுத்தாதீங்க..?'' -இப்படியும் வங்கியா? ஏமாந்து மீண்ட பெட்ரோல் பங்க் நிர்வாகி!

Published on 03/08/2020 | Edited on 03/08/2020
2000

 

 

மணப்பாறை அருகே முத்தப்புடையான் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் தனது சித்தப்பா வேலுச்சாமி மற்றும் சகோதரர் சுரேஷ் ஆகியோருடன் இணைந்து அதே பகுதியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். மணப்பாறை திண்டுக்கல் சாலையில் உள்ள வங்கியில் கடந்த 25 ஆண்டுகளாக வங்கி கணக்கு வைத்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி பெட்ரோல் பங்க் வங்கி கணக்கில் இருந்து 10,000 ரூபாய் எடுத்ததாக எஸ்.எம்.எஸ். வருகிறது. கடன் தவணைக்காக எடுத்திருக்கலாம் என்று அலட்சியாக இருக்கிறார் நடராஜன்.

 

கடந்த 20ம் தேதி மின் கட்டணம் கட்டுவதற்காக ஆன்லைனில் செலுத்தும்போது வங்கி கணக்கில் ரூ 48,000 குறைந்து இருப்பது தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நடராஜன் தனது வங்கி கணக்கு செலவு பட்டியலை டவுன்லோடு செய்து பார்க்கிறார்.

 

அதில் 10ம் தேதி 10,000 ரூபாய், 11ம் தேதி 1,000 ரூபாய், அதே தேதியில் 9,000 ரூபாய், 13ம் தேதி ரூபாய் 10,000 ரூபாய், 14ம் தேதி 8,000 ரூபாய், 19ம் தேதி 10,000 என 6 முறை 48,000 ரூபாய் எடுத்திருப்பதை பார்த்து திகைத்து போனார். 

 

உடனே வங்கி அதிகாரி பிரபாகரனிடம் கடந்த 22ம் தேதி பணம் காணாமல் போனது குறித்து புகார் செய்திருக்கிறார். அதற்கு வங்கி நிர்வாகம் பணம் திருடிய நபரை காட்டிக் கொடுக்காமல் பணத்தை திருப்பி கொடுப்பதாக பேரம் செய்து நடராஜனை சமாதனப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள்.

 

இதன் பிறகு கடந்த 24ம் தேதி 20,000 ரூபாய் நடராஜன் கணக்கில் வரவு வைத்திருக்கிறார்கள். மீதி 28,000 என்னாச்சு? ஏன் இப்படி ஏமாற்றுகிறீர்கள்? என்று மீண்டும் வங்கி அதிகாரியிடம் புகார் செய்திருக்கிறார். அதற்கு வங்கி அதிகாரியோ, ''எப்படியும் மீதி 28,000 ரூபாய் பணத்தை கொடுத்து விடுவார்கள் பெரிசு படுத்தாதீங்க, உங்களுக்கு தேவை பணம் தானே அது திரும்ப வந்திடும் வேற எதுவும் கேட்காதீங்க'' என்று பஞ்சாயத்து செய்து பணத்தை திரும்ப கொடுத்திருக்கிறார்கள்.

 

உழைத்த பணத்தை பாதுகாப்புக்காவும், அரசின் சட்டத் திட்டத்திற்காகவும் வங்கியை நம்பி பணம் செலுத்துகிற பொதுமக்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் பணம் திருடுபவர்களை வங்கியே பாதுகாப்பது அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் வங்கியில் ஏமாந்து மீண்ட நடராஜன்!

 

 

சார்ந்த செய்திகள்