வருடந்தோறும் சிவகங்கையில் மருது பாண்டியர் நினைவு தினம் சிறப்பாக அனுசரிக்கப்படும். 221-ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மருது பாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கையில் சில பகுதிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை, தேவக்கோட்டை, காளையார்கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி உள்ளிட்ட ஆறு வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனையொட்டி மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மருது பாண்டியர் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட மதுரை ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், மருது பாண்டியர் பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவில்லை. அவருடைய சமுதாயத்துக்காரர்களுக்குத் தெரிகிறதே ஒழிய இளைஞர்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனவே தமிழக அரசு மருது பாண்டியர்களின் வரலாற்றைப் பாடப் புத்தகத்தில் வைக்க வேண்டும். அதற்காகத் தபால் தலை வெளியிட வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை மருது பாண்டியர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.'' என்றார்.