மத்திய அரசைப் பின்பற்றி அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், விடுப்புகளை சரண்டர் செய்து அதைப் பணமாகப் பெறுவதையும் எடப்பாடி அரசு ரத்து செய்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசாங்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காவல்துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவல்துறையினர், அரசு தனது முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையில் பணியாற்றும் சிலர் நம்மிடம், "இந்த ஊரடங்கு காலத்தில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்து வருகிறோம். ரோட்ல சுத்துற ஒவ்வொருத்தரையும் கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி கெஞ்சி கூத்தாடி, அய்யா வீட்டில இருங்கய்யான்னு சொல்லி நாங்க கரோனாவுக்கு எதிரான போரில் எங்களை ஈடுபடுத்தி இருக்கோம். இதனாலேயே எங்களில் பலருக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கோம். எனக்கு இருக்கான்னு எனக்கே தெரியாது. டெஸ்ட் எடுத்து பார்த்தா தான் தெரியும். அந்த அளவுக்கு உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்கிறோம். டாக்டருங்களும், தூய்மைப் பணியாளர்களும் கரோனாவுக்கு எதிரான போரில் முன்னாடி இருக்காங்க, அதனால அவங்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியமாக வழங்குவதாக முதல்வர் அறிவித்தது சந்தோசம் தான், ஏத்துக்குறோம். அதே போரில் பின்வரிசையில் நிற்கிறது நாங்கள், எங்களுக்குச் சிறப்பு ஊதியம் கொடுக்க வேண்டாம். ஏற்கனவே கொடுக்கிற ஊதியத்தையும் குறைச்சா என்னங்க நியாயம்.? இப்ப பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைக்கே போகலை, அவங்களுக்கு இந்த அரசாங்கம் சம்பளம் கொடுக்குது. வேலை செய்கிறவர்களையும், வீட்டில் இருப்பவர்களையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்ப்பது ஏற்க முடியாது. நிதிப் பற்றாக்குறையா இருக்குதுன்னா? உசிர கொடுத்து வேலை பார்க்கிற எங்க சம்பளத்தில தான் கை வைக்கனுமா?" என்கின்றனர்.
லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து சரியா சாப்பிடாமல், சாப்பிட கடைகளும் இல்லாமல் காவல்துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். எனவே இந்த 3 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது. அப்படிச் செய்வது அரசுக்கு நல்லதல்ல.!