வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்துள்ளது. இப்புயல் சென்னையிலிருந்து 520 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வந்த நிலையில் தற்பொழுது புயல் நகரும் வேகம் 12 கிலோமீட்டராக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. எனவே, பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி - ஸ்ரீஹரிக்கோட்டா இடையே நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் என நேற்று முதல் சொல்லப்பட்டது. கரையைக் கடக்கும்பொழுது மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் பொழுது 65 முதல் 75 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறாவளிக்காற்று 85 கிமீ வரை வீசக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புயலின் காரணமாக வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிக மிகப் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.