வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 170 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலானது இன்று இரவு கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக தற்போது இரவு முதல் அதிகாலை வேளையில் கரையைக் கடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகப் புயல் மாமல்லபுரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 121 ஆண்டுகளில் மாமல்லபுரத்துக்கு அருகே பல புயல்கள் கரையைக் கடந்துள்ளது.
இந்தப் புயலும் இன்று மாமல்லபுரத்தில் கரையைக் கடந்தால் ஒட்டுமொத்தமாக மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த புயல்களின் எண்ணிக்கை 13 ஆக உயரும். மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 70 கி.மீ. முதல் 80 கி.மீ வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.