Skip to main content

“இந்த அரசுக்கு பெண்களை கண்டால் வெறுப்பு” - சி.வி.சண்முகம்

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

CV Shanumagam on viluppuram

 

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் 5ம் தேதி மாவட்டம் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 7ஆம் தேதி முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் விழுப்புரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். 


அப்போது பேசிய சண்முகம், “திமுக பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களையும் முடக்கி வருகிறது. உதாரணமாக பள்ளிப் படிப்பை முடித்த பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு 25,000 ரூபாய் உதவித் தொகை, ஒரு பவுன் தங்கம், பட்டம் படித்த பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம், அதோடு 50,000 நிதி வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின்படி பல்வேறு ஏழை நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் திருமணத்திற்கு மிக பெரும் உதவியாக இருந்தது. 


ஏழை நடுத்தர குடும்பத்து பெண் பிள்ளைகளின் திருமணத்திற்கு எங்கள் அரசு அளித்து வந்தது. இது போன்ற உதவியை அந்த குடும்பத்தில், கூட பிறந்த சகோதரர்கள்கூட கொடுத்து உதவ மாட்டார்கள். ஆனால் அப்போதே எங்கள் அரசு கொடுத்தது. காரணம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண் பிள்ளைகளின் படிப்பை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஏழை நடுத்தர குடும்பங்கள் அந்தப் பெண் பிள்ளைகள் திருமணம் செய்து கொடுக்க சிரமப்படக் கூடாது அவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்க வேண்டும் என்ற தீர்க்கதரிசன எண்ணத்தோடு அறிவித்து செயல்படுத்திய திட்டம்; தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அதை இந்த அரசு நிறுத்திவிட்டது. 

 

தற்போது அரசுப்பள்ளியில் படித்து விட்டு கல்லூரியில் சேரும் பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அளியுங்கள் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதற்காக தாலிக்கு தங்கம் தரும் திட்டத்தை ஏன் நிறுத்த வேண்டும். படித்துவிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் அவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வரவும் அவர்கள் வாழ்க்கை தரம் உயர அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் 25,000 ரூபாய் மானியத்தில் அம்மா ஸ்கூட்டி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வந்தது அதையும் நிறுத்திவிட்டார்கள். 


இந்த அரசுக்கு பெண்களை கண்டால் வெறுப்பு. அதன் காரணமாக பெண்களுக்கான திட்டங்களை நிறுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் விழுப்புரம் நகராட்சி புதிய கட்டிடம் மற்றும் விக்கிரவாண்டி திருவெண்ணைநல்லூர் தாலுகா அலுவலக கட்டிடங்களை திறப்புவிழா செய்து உள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாதங்களில் இவர்கள் 10 ஆண்டுகால சாதனைகளை செய்ததாக முதலமைச்சர் கூறிவிட்டு சென்றுள்ளார். 


எங்கள் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட கட்டடங்களையும் திட்டங்களையும் திறந்து வைத்துவிட்டு இவர்கள் செய்ததை போல சொல்கிறார்கள். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதை தடுக்க வேண்டிய திறமைவாய்ந்த தமிழக போலீஸ் தற்போது சிரிப்பு போலீஸாக மாறி நிற்கிறது. இதற்கு தமிழக அரசின் திறமையற்ற நிர்வாகமே காரணம். சமீபத்தில்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றில் திமுக வெற்றி பெற்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சேர்மனாக பதவியில் அமர்ந்துள்ளனர். அப்படி அவர்களை வெற்றி பெற வைத்து பதவியில் அமர வைத்த அந்த மக்களுக்கு 15 நாளில் திமுக அரசு கொடுத்த பரிசு 150% சதவீத சொத்து வரி உயர்வு. 


2008ஆம் ஆண்டு  திமுக அரசு கலைஞர் முதல்வராக இருந்தபோது சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது அவரது மகன் ஆட்சியில் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் என்ன பாவம் செய்தார்கள். எனவே இந்த அரசைக் கண்டித்து இந்த மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது” இவ்வாறு சி.வி.சண்முகம் பேசினார். 


சில மணி நேரத்தில் சி.வி. சண்முகம் உட்பட உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  அனுமதி இல்லாமல் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்