கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள மேலமணக்குடி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் திருலோகசந்தர் வயது 38. இவர் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் நேற்று விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டி.ஜ,ஜி) அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார்.
அப்போது அந்த அலுவலகம் முன்பு திருலோகசந்தர், தனக்கு ஊரில் சிலர், பில்லி சூனியம் ஏவல் வைத்துள்ளதாகவும் அதன்மூலம் தன்னைக் கொலை செய்வதற்கு முயற்சி செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறியுள்ளார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், அவர் பேச்சை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளனர்.
உடனே திருலோகசந்தர், அவரது பையில் வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, தன் உடல் மீது ஊற்றிக்கொண்டு, தீ வைத்துக் கொண்டுள்ளார். இதைக் கண்டு திடுக்கிட்ட பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று அவர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், இதுகுறித்து தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் திருலோகசந்தர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் இவரை யாராவது கொலை செய்ய முயற்சி செய்கிறாரார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி அலுவலகம் முன்பு, வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.