கடந்த 21.5.2020 ஆம் தேதி வடலூர் அருகேயுள்ள கருங்குழி, வண்ணான்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயப்பிரியன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வடலூர் கருங்குழியைச் சேர்ந்த கேசவப்பெருமாள் என்பவரின் மகன் மூட்டைப்பூச்சி (எ) சம்பத்குமார் என்பவர் ஜெயப்பிரியனை வழிமறித்து, அசிங்கமாகத் திட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூபாய் 500ஐ பறித்துக் கொண்டு கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.
இதுகுறித்து ஜெயப்பிரியன் வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் கவிதா (பொறுப்பு) புலன் விசாரணை மேற்கொண்டு சம்பத்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். பின்னர் சம்பத்குமார் கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட சென்னை சோலைநகர் காவல்நிலையம், சிட்லபாக்கம், பீர்க்கன்கரணை மற்றும் கடலூர் மாவட்டத்தில் வடலூர், ஊமங்கலம், குறிஞ்சிப்பாடி, மந்தாரக்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் 30 திருட்டு வழக்குகள் உள்ளன. அதையடுத்து இவரின் குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஓராண்டு காலம் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் சம்பத்குமார் ஓராண்டு குண்டர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இதேபோல் சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரை தாக்கியது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், கடந்த 17.05.2020 அன்று அதே ஊரைச் சேர்ந்த தேவநாதன் சக்தி என்கிற சாமிநாதன்(28), செந்தில்வேலன் மகன் மேகநாதன்(32) சாத்தமாம்பட்டு மாசிலாமணி மகன் சசிகுமார்(27) ஆகிய மூன்று பேரையும் கைது செய்வதற்காக காடாம்புலியூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சிறுதொண்டமாதேவி கிராமத்திற்குச் சென்றார்.
அவர்களைக் கைது செய்ய முற்பட்டபோது 3 பேரும் உதவி ஆய்வாளரைப் பணி செய்ய விடாமல் தடுத்து கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காடாம்புலியூர் காவல் ஆய்வாளர் மலர்விழி விசாரணை மேற்கொண்டு 3 பேரையும் கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்களின் குற்ற செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இவர்கள் மூவரும் குண்டர் தடுப்புக் காவலில் வைக்க கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டடனர். ஒரேநாளில் கடலூர் மாவட்டத்தில் 4 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்டது பரபரப்பாகியுள்ளது.