என்.எல்.சி. நிர்வாகத்தின் அலட்சிய போர்க்கால இரண்டாம் அனல் மின்நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கூடுதல் நிவாரணமும், அவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "என்.எல்.சி இரண்டாம் அனல் மின் நிலையத்தில் 5 மற்றும் 6 யூனிட்களில் பாய்லர் வெடித்த விபத்தில் இதுவரை ஒப்பந்த, இன்கோசர்வ், நிரந்தரத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர் உயிரிழப்புகளும், மேலும் 10 பேர் படுகாயமடைந்து, மேல் சிகிச்சையிலுள்ள நிகழ்வுகள் மிகவும் மனவேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
இரண்டாம் அனல் மின் நிலையத்தில் கடந்த வருடம் 2019 ஜுன் 9 மற்றும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஆறாவது யூனிட்டிலும், தற்சமயம் ஐந்தாவது யூனிட்டில் எனத் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவது, நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் தான் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இதுவரை 20 உயிர்களைக் காவு வாங்கிய பின்பும் மெத்தன போக்கைக் காட்டும் என்.எல்.சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து எடுத்ததாகக் கூறப்படும் நடவடிக்கைகள் மற்றொரு விபத்தைத் தவிர்க்க போதுமானதாக இல்லாமல் இருப்பதனால், அப்பாவி தொழிலாளிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோகிறது. இதனால் இவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த விபத்துகள் குறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற நிலையில் விபத்துகள் மேலும் மேலும் நடைபெறுவது வருத்தமளிக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் என்.எல்.சி நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாததே ஆகும். பாய்லர் பராமரிப்புப் பணிகளை, அதனை நிறுவிய மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திற்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு தரமற்ற பணிகள் மேற்கொள்வதால்தான் தொடர் விபத்துகள் ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர். இந்த விபத்துகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு உரிய விசாரணை நடத்தி, விபத்துக்கான உண்மையான காரணத்தை நடுநிலையோடு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும்.
மேலும் என்.எல்.சியில் இதுபோன்ற விபத்துகள் நடப்பது சமீப காலத்தில் வாடிக்கையாகி விட்டது. தொடர்ந்து நிர்வாகம் இதுபோன்ற விபத்துகள் நடக்காத வண்ணம் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பிற்கான உத்திரவாதத்தை அளித்திட வேண்டும். மேலும் உயிரிழந்த மற்றும் காயமடைந்துள்ளவர்களுக்கு நிர்வாகம் அறிவித்துள்ள நிவாரணத் தொகை மிகச் சொற்ப அளவிலானதாகவே உள்ளது.
அந்தத் தொகையும் அங்குப் பணிபுரிபவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து தரப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது கேலிக்கூத்தான முடிவாகும். சாதாரணமாகச் சாலை விபத்துகளில் கிடைக்கும். இழப்பீட்டுத் தொகையே இதற்குச் சமமாக இருக்கும்போது, நிறுவனத்தின் உற்பத்திக்காகவும், அதன் வளர்ச்சிக்காவும் தங்கள் உயிரையே கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் தன் பங்காக அளிக்கும் நிவாரணம் எவ்வளவுதான் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இந்த மாவட்டத்தின் இயற்கை வளத்தைச் சுரண்டியும், ஒருகாலத்தில் ஆர்டீஷியன் நீரூற்றுகள் நிறைந்த இந்த மாவட்டத்தின் நீர் ஆதாரத்தை நிலக்கரி வெட்டியெடுக்க பாழாக்கிய இந்நிறுவனம் CSR FUND- ஐ சென்ற வருடம் மத்திய அமைச்சர் ஃபியூஸ்கோயல் மூலம் ரயில்வே துறைக்குக் கொண்டு சென்றிருக்கும் நிலையில், மீண்டும் இந்த வருடமும் வட இந்தியாவுக்கே அந்தத் தொகையை முழுவதுமாகக் கொண்டு செல்ல திட்டமிடப்படுவதாக அறிகிறேன்.
இப்படி இங்கே லாபம் ஈட்டும் பணத்தைப் பாதிக்கப்படும் தொழிலாளியின் குடும்பங்களுக்கும் மற்றும் இந்த மாவட்ட மக்களுக்கும் கொடுக்க மனம் வராதது வேதனையளிக்கிறது. அதேபோல் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுகளுக்குக் கண்டிப்பாக அவர்களின் கல்வித் தகுதிற்கேற்ப, தகுதியான வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும். இந்தத் தொடர் விபத்துகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தமிழக முதலமைச்சர் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு, பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டும் நிர்வாகத்திற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்ப்பதைக் கைவிட வேண்டும். தலைவர் கலைஞர் முதல்வராக இருந்தபோது நெய்வேலி பிரச்சினைகளில் அவரே நேரிடையாக தலையிடுவதோடு, என்னையும் நிர்வாகத்தோடு கலந்துபேசி தீர்வுகாண வைப்பார்.
ஆனால், இப்போதோ ஆளும் கட்சியினர் இங்கு வந்து வேடிக்கை பார்த்துவிட்டு சென்று விடுகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று கேட்டுக்கொள்வதோடு, என்.எல்.சி.யில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்குப் பணிபுரியும் இடத்தில் பாதுகாப்பு உத்திரவாதத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.