கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனால் கூட்டம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன.
மதுவுக்கு அடிமையானவர்கள் மாற்று போதையைத் தேடி வார்னிஷ், சானிடைஸர் லோஷன் ஆகியவற்றைக் குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மற்றொருபுறம் கள்ளச்சாராய புழக்கமும் அதிகரித்துள்ளது. குறிப்பாகக் கடலூரில் மெத்தனால் அருந்திய 3 பேர் நேற்றும், இன்றும் பலியாகினர்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கானதுகண்டான் கிராமத்தில் இயங்கி வந்த தனியார் எரிசாராயத் தொழிற்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இத்தொழிற்சாலையில் இருந்து மர்ம நபர்கள் திருட்டுதனமாக எரிசாராயக் கடத்தலில் ஈடுபடுவதாக சார் ஆட்சியர் பிரவீன் குமார்க்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வட்டாட்சியர் கவியரசு,காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவின் மூடப்பட்ட இத்தொழிற்சாலையில் பல்லாயிரக்கணக்கான கொள்ளளவு கொண்டது. வேதியியல் கலந்த தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் எரிசாராயம், மருத்து தயாரிப்பதற்கு பயன்படுத்தும் எரிசாராயம் என தரம் பிரிக்கப்பட்ட 40 ஆயிரம் லிட்டர் சாராயம் ராட்சச கொள்கலனில் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டார். மேலும் இத்தொழிற்சாலையில் உள்ள சாராயக் கிடங்குகள் மற்றும் அதற்கு உண்டான பாதுகாப்பு பூட்டுகளை உடைத்து மர்ம நபர்கள் எரிசாராயத்தைக் கடத்தி சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், இத்தொழிற்சாலையில் உள்ள சாராயத்தை, மர்மமான முறையில் நுழைந்து, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் எரிசாராயத்தைக் கடத்திச்சென்று ஒரு லிட்டர் சாராயம் 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சார் ஆட்சியர் பிரவீன்குமார், "இரண்டு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்ட இத்தொழிற்சாலையிலிருந்து, கடத்திச் செல்லப்படும் எரிசாராயத்தை யாரும் அருந்த வேண்டாம் என்றும், வேதியியல் பொருட்கள் கலந்த எரிசாராயம், இரண்டு வருடங்களுக்கு மேல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதை அருந்தினால் விஷத்தன்மை ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் அதை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குத் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இத்தொழிற்சாலையில் உள்ள சாராயத்தை அழிப்பது அல்லது பாதுகாப்பது குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.