ஒரே இடத்தில் செயல்படும் மூன்று மதுக்கடைகளை அகற்றக்கோரி மாதர் சங்கம் சார்பில் மதுக் கடைகளுக்குப் பூட்டு போடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலைய வாயிலில் 3 டாஸ்மாக் கடைகள் ஒரே இடத்தில் உள்ளது. இந்தக் கடைகளில் மது குடித்துவிட்டு மதுப்பிரியர்கள் பேருந்து நிலையத்தின் வாயில் பகுதியில் நின்று கொண்டு பேருந்து நிலையம் வரும் பயணிகளிடமும் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள். மேலும் இந்த டாஸ்மாக் கடை வழியாக அண்ணா தெரு, மீதிகுடி ரோடு, கோவிந்தசாமி தெரு, மீதிகுடி கிராமம், கதிர்வேல் நகர், கோவிலாம்பூண்டி, நற்கந்தங்குடி, பிச்சாவரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்லும் முக்கிய சாலையாக இந்த சாலை உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த சாலையின் வழியாகச் செல்லும்போது அசிங்கமான வார்த்தைகளால் பேசியும் சாலையில் அமர்ந்து கொண்டு மதுவை ஊற்றிக் குடிப்பதும் மேலும் ஆடைகள் இன்றி அதே இடத்தில் மதுப்பிரியர்கள் படுத்து கிடப்பது என, இவை அவ்வழியாகச் செல்லும் அனைத்து தரப்பினருக்கும் முகச்சுளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இரவு நேரங்களிலும் டாஸ்மாக் விடுமுறை நாட்களிலும் டாஸ்மாக் மது பாட்டில்கள் இங்கு தங்கு தடை இன்றி கிடைப்பதால் 24 மணி நேரமும் அப்பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் மது விற்பனை நடந்தவாறே இருக்கும். இதனால் இரவு நேரத்தில் சென்னை, பாண்டி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் இவர்கள் குடிபோதையில் சண்டை இடுவதும் அநாகரிகமான வார்த்தைகளைப் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் மதுப்பிரியர்கள் செல்போன் பணம் உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு குடித்துவிட்டு அதே இடத்தில் படுத்து விடுவதால் அவர்கள் வைத்திருந்த பணம், செல்போன், உடைமைகள் பறிபோகிறது. இதனை வெளியே தெரிந்தால் அவமானம் என பலர் போதை தெளிந்து சென்று விடுகிறார்கள். எனவே இந்த 3 டாஸ்மாக் கடைகளையும் இடம் மாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி உள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர், கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தில் கடையை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகிறார். இருப்பினும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் மல்லிகா கூறுகையில்; "பேருந்து நிலைய வாயிலில் உள்ள 3 டாஸ்மாக் கடையால் எப்பொழுதும் கூட்டம் அதிகமாகவே இருக்கும். மாலை 4 மணி முதல் 10 மணி வரை திருவிழா கூட்டம் போல் இங்கு குடிகாரர்களின் கூட்டம் இருக்கும். இவர்கள் இந்த வழியாகத் தனியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் பேசுவதும் சண்டையிடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தக் கடையை மாற்று இடத்தில் வைக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக, நடவடிக்கை இல்லை என்றால் முற்றுகையிட்டு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப் போவதாக" தெரிவித்தார்.