மணிப்பூரில் நடைபெற்றுவரும் தொடர் கலவரங்களும், இரு பெண்களின் ஆடைகளைக் களைத்து சாலையில் இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வும் தொடர் கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும், இதற்குத் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 78 நாட்கள் கழித்துப் பிரதமர் மோடி கடந்த ஜூலை 20ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாள் நாடாளுமன்றத்தின் வெளியே பேசினார். இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குள் பிரதமர் மோடி மணிப்பூர் குறித்தான விவாதத்தில் பங்கேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், “ருசி கண்ட பூனையைப் போல் குஜராத்தில் கலவரம் செய்து ஆதாயம் பெற்ற பா.ஜ.க மணிப்பூரில் கலவரம் செய்து ஆதாயம் பெற முயற்சி செய்கிறது. நாடு முழுவதும் அந்த முயற்சியைப் பா.ஜ.க செய்யும். சமூகவிரோதிகளுக்கு அடைக்கலம் தரும் இடமாக பா.ஜ.க இருக்கிறது. அந்தக் கட்சியில் இருக்கும் சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுத்தாலே தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கிற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் இரண்டு ஜாதிகளை மோதவிட்டு அரசன் பார்ப்பார், அதேபோலத்தான் மணிப்பூரில் இரண்டு சமூகங்களை மோதவிட்டு மோடி வேடிக்கை பார்க்கிறார்” என்று தெரிவித்தார்.