தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த உரையில், கரோனா வைரஸ் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. கரோனாவிற்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகப்படியான பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரைக்கும் ஆறரை லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்களை மாநில எல்லைகளில் அதிகாரிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதனால் அதிக பாதிப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் சிரமங்கள் தடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 35.6 லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத கைத்தறி நெசவாளர்கள், முடிதிருத்துவோருக்கு ரூ.2000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பயிர்கடன், கூட்டுறவு கடன், மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்கள் மூலம் 8 லட்சம் மக்களுக்கு தினமும் சூடான, சுவையான, சுகாதாரமான உணவு வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் 86 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் இல்லை என்பது அதிக பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. பொதுமக்கள் கூடுமானவரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களுக்கு வெளியே செல்லும்போது முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை எனில் கரோனா பரவுவதைத் தடுப்பது சாத்தியமாகாது என்றார்.