தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 10.00 தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
இரண்டாவது அமர்வில் முதல் நாளான இன்று மறைந்த பேராசிரியர் க.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ ப.சந்திரன் மற்றும் திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி, குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சட்டப்பேரவையை வரும் புதன்கிழமை வரை சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.
அதையடுத்து பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்தும், மானிய கோரிக்கை விவாதத்தில் யார் யார் பேச வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு தொடர்பாக பேரவையில் விவாதிக்கக்கோரி திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.