திருச்சி மாவட்டம், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது.
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம், மாநகரக் காவல்துறை ஆணையர் அருண், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பழனிகுமார், சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், “தொடர்ந்து தமிழகத்தில் முன்களப் பணியாளர்கள் இழப்பு அதிகரித்துக்கொண்டேவருகிறது. எனவே முன்களப் பணியாளர்களுக்கான பாதுகாப்பை இந்த அரசு விரைந்து உறுதி செய்திடும் என்றும், பொதுமக்களை ஊரடங்கு காலத்தில் விழிப்புணர்வு மூலம் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்வதற்கும் வீட்டைவிட்டு வெளியே வராமல் பாதுகாத்துக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.