கரோனா தொற்றின் இரண்டாவது அலை நுரையீரலைத் தாக்கி உயிர் பலிகளை அதிகரிக்க செய்து வருகிறது. தொற்றைக் குறைக்க ஊரடங்கு அமல்படுத்திய போது தொற்று பரவல் குறைந்திருந்தாலும் இறப்பு குறையவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 முதல் 450 பேர் வரை கரோனாவால் இறப்பதாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகிறது. இந்த நிலையில் தான் ஒரு வழக்கறிஞர் மூச்சுத்திணறலோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று குணமடைந்து வெளியே வந்து தன்னை கவனித்துக் கொண்ட செவிலியர்களின் கால்களுக்கு மல்லிகை பூக்களை தூவி கண்ணீர் மல்க கரம் கூப்பி நன்றி சொன்ன நெகிழ்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிமாறன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறலோடு ஒரு வாரத்திற்கு முன்பு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு பணியில் இருந்த செவிலியர்கள் அவரை கவனமாக பார்த்துக் கொண்டனர். விரைவில் குணமடைந்த நிலையில் இன்று (09/06/2021) வீட்டுக்கு புறப்பட்டவர், பணியில் இருந்த செவிலியர்களை வெளியே வரச் சொல்லி அவர்களின் கால்களில் மல்லிகை பூக்களை தூவியதுடன் கண்கள் பனிக்க கரம் கூம்பி வணங்கியபடியே, "என்னைப் போலவே அனைத்து நோயாளிகளையும் கவனமாகவும், கனிவாகவும் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் கவனிப்பால் விரைவில் குணமடைவார்கள்" என்று கூறினார்.
தொடர்ந்து அந்த செவிலியர்கள், "வீட்டிற்கு போய் கவனமாக இருங்கள். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்" என்று கூறினார்கள். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. "தங்கள் உயிரை பணயமாக வைத்து கரோனா வார்டில் பணி செய்யும் செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு சரியான முறையில் மரியாதை செய்திருக்கிறார் வழக்கறிஞர்" என்றனர் மக்கள்.