சேலத்தில், கரோனா வைரஸை பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய மத போதகர்கள் உள்பட 16 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
கரோனா வைரஸ் பரவல் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியபோதே, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஆரம்பத்தில் ஒரே ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றுக்குப் பல நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மார்ச் 11ம் தேதியன்று, இந்தோனேசியா நாட்டில் இருந்து சேலம் வந்த 11 பேர் கொண்ட மத போதகர்கள் குழு மற்றும் சென்னையைச் சேர்ந்த அவர்களுடைய வழிகாட்டி ஒருவர் என 12 பேரை சுகாதாரத்துறையினர் பிடித்து பரிசோதனை செய்தனர். அவர்களில் ஐந்து பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆனால், அதன்பிறகுதான் சேலம் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு பெரும் தலைவலியே காத்திருந்தது. இந்தோனேசிய மத போதகர்கள் சென்று வந்த மசூதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறையினர், 25,000- க்கும் மேற்பட்டோரிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்த தப்லீக் முஸ்லிம் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 4 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஏப்ரல் 16-ம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு இந்நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில்தான், சேலத்தில் கரோனா வைரஸ் பவரலுக்கு காரணமாக இருந்ததாக இந்தோனேசிய மத போதகர்கள் 11 பேர் உள்பட மொத்தம் 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சையில் இருந்த இந்தோனேசியர்களும், உடன் வந்த வழிகாட்டியும் நோயிலிருந்து மீண்டனர். இதையடுத்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
வைரஸ் பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 16 பேரும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆத்தூரில் இருந்து சென்னை புழல் மத்தியச் சிறைக்கு வியாழக்கிழமை (ஏப். 16) கொண்டு செல்லப்பட்டு, அடைக்கப்பட்டனர்.