Published on 15/05/2020 | Edited on 15/05/2020
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோரில் ஒரு சிலருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்பு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாகச் சென்னையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் 100- க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா தடுப்புப் பணியின்போது தொற்றுக்குள்ளான சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் 34 ஊழியர்களுக்குக் கருணை தொகையாக தலா இரண்டு லட்சம் வழங்கப்படும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.