நாகை அரசு மருத்துவமனை கரோனா வார்டில் ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ராஜேஷ் என்பவர் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் நாகை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுவருகின்றனர்.
நாகை அடுத்துள்ள நாகூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாகையில் உள்ள தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 12 ஆம் தேதி கரோனா தொற்று ஏற்பட்டதும், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சூழலில் நேற்று இரவு நாகை மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் கசிவு ஏற்பட்டடிருக்கிறது. அடுத்த நொடியே கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை மற்றொரு வார்டுக்கு இடமாற்றம் செய்துள்ளனர். அப்படி மாற்றபட்ட தனியார் வங்கி காசாளர் ராஜேஷ் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.
கரோனா வார்டில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால்தான், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனியார் வங்கி காசாளர் ராஜேஷ் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து நாகை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் அங்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் விஸ்வநாதன் மற்றும் மருத்துவர்களிடம் கடுமையாக விசாரணை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியவர், “அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட தனியார் வங்கி ஊழியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கரோனா நோயாளிகள் மற்றொரு வார்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்று கூறினார்.