உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழகத்தில் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 18 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் இந்த வைரஸ் தோற்று காரணமாக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து திருவண்ணாமலை வந்த தமிழக மென்பொறியாளர் ஒருவர் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை வ.உ.சி நகரை சேர்ந்த வினோத் என்பவர் சீனாவில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 19 ஆம் தேதி சீனாவிலிருந்து சென்னை வந்துள்ளார். பின்னர் சென்னையிலிருந்து திருவண்ணாமலை சென்ற அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்துள்ளது. இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சென்று அவர், தான் சீனாவிலிருந்து வந்துள்ளதாகவும், கரோனா அறிகுறிகுறிகள் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை தனி அறையில் அவர் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். சந்தேகத்தின் பேரிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே கரோனா தொற்று உள்ளதா என உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.