தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள் உட்பட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்தார். மீதியுள்ள 22 பேருக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குப் பாதிப்பு உள்ளதா எனப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று பரிசோதனை செய்யும் பணிகள் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இதில் போடியைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 16 பேருக்கு நேற்று முன்தினம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்ததில் 20 வயது இளம்பெண் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர் ஏற்கனவே கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரின் மகள். இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தேனி உத்தமபாளையம் கம்பம் சின்னமனூர் பகுதிகளுக்கு வீடு தேடிச் சென்று கரோனா பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. தேனியில் 8 பேர், உத்தமபாளையத்தில் 13 பேர், கம்பத்தில் மூன்று பேர், சின்னமனூரில் ஆறு பேர் என 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வு முடிவுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் போடியைச் சேர்ந்த 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக நேற்று முன்தினம் தெரிய வந்தது. அவர்கள் வீட்டுக்குச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களைத் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவக் குழுவினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் சிலர் கரோனா பயத்தில் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்தனர். வீட்டிலிருந்தே சிகிச்சை பெற அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். பின்னர் அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் அறிவுரை வழங்கினர். அதை அடுத்து ஒவ்வொரு குடும்ப உறுப்பினராக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். நேற்று வரை அவர்களை அழைத்துச் செல்லும் பணியே நடந்தது.
அதேபோல் உத்தம பாளையத்தில் நேற்று மருத்துவப் பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் சென்றபோது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சிலர் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கும் கரோனா தீவிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மருத்துவப் பரிசோதனை அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேனியில் பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 7 பேர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றொருவர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆவார். இவர்களில் யாருக்காவது கரோனா உள்ளதா? என்பது பரிசோதனைக்குப் பிறகு தெரியவரும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.