வேலூர் மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவு மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இனி, காய்கறி கடைகள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்கும். மளிகை, சூப்பர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்கள் வாரத்தில் திங்கள்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். பால் விற்பனை காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே நடைபெற வேண்டும். பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இறைச்சிக்கடைகள் திறக்க முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் பட்டியலில் உள்ள மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் எனவும் அவசியமின்றி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்மென காவல்துறைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். கரோனா பாதிப்பால் வேலூர் மாநகரில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது. ஏப்ரல் 9 ந்தேதி முதல் இவை நடைமுறைக்கு வருகின்றன.