Skip to main content

சாதனையில் மூன்று ஹீரோக்கள்! கரோனாவை விரட்டிய ஈரோடு!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

corona virus impact in Erode

உலகத்தின் இதயத்தை முடக்கி, ஒவ்வொரு நொடியையும் தன்னை பற்றியே பேச வைத்துக் கொண்டு வருகிறது கொடூர கரோனா வைரஸ். சீனாவில் தொடங்கி, ஒரு குட்டித் தீவையும் விடாமல் 200 நாடுகளில் தன் கொடிய கரத்தை நீட்டி வைரஸ் என்ற வேரை மனித சமூகத்தின் மீது பரப்பி ஆட்கொள்ளியாக அமர்ந்துள்ள அந்த கரோனா, இந்திய சமூகத்தையும் விடாமல் பற்றிக் கொண்டது. 


ஆனால் மனித ஆற்றல், அறிவியல், மருத்துவம், உழைப்பு, போராடும் குணத்தால் அந்த கொடிய கரோனாவை அடித்து விரட்டி அந்த சுவடே இல்லாமல் செய்ய முடியும் என்பதை நமது தமிழகத்தில் உள்ள ஒரு மாவட்டம் நிரூபித்து போரில் வெற்றி வாகை சூடியுள்ளது.

முதன்முதலாக மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்திய அரசு ஒரு அபாய அறிவிப்பை அறிவித்தது. அது நாட்டில் உள்ள 72 மாவட்டங்கள் கரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள ஆபத்தான பகுதிகள் என்று அதில் தமிழகத்தில் மூன்று மாவட்டங்கள் ஆம் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு இந்த மூன்று மாவட்டங்கள் தான்.

எது கரோனா வைரஸ் தொற்றில் மக்களுக்கு ஆபத்தான பகுதி என்று சொல்லப்பட்டதோ, அந்த ஈரோடுதான் இப்போது கரோனா வைரஸை முழுவதுமாக விரட்டி துரத்தியுள்ளது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றோடு போராடி வெற்றி பெற்றதில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக ஈரோடு பெருமை கொள்கிறது.

தொடக்கத்தில் 24 அடுத்து 42 என தொடர்ந்து உயர்ந்து உயர்ந்து 66 ஆனது, அதன் பிறகும் கணக்கு கூடி மொத்தம் 70 பேர் இங்கு கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். திருச்சியை சேர்ந்த ஒருவர் மட்டுமே வெளிநாட்டிலிருந்து வந்தவர், மீதி 69 பேருக்கு ஏற்பட்ட தொற்று என்பது தாய்லாந்து நாட்டிலிருந்து வந்த 6 பேர் மூலம் மற்றும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த சிலர் மூலம் மற்றும் அவர்களின் தொடர்புகள் என்ற வட்டத்திற்குள்ளேயே இருந்தது.

ஈரோட்டுக்கு கரோனா வைரஸ் வந்த வழியை ஆரம்ப நிலையிலேயே மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்தது, களத்தில் இறங்கினார் மாவட்ட ஆட்சியர் கதிரவன். அடுத்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஐ.பி.எஸ்., தொடர்ந்து பொது சுகாதாரத் துறையின் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சவுண்டம்மாள் இப்படி இந்த மூன்று அதிகாரிகளும் நேரடியாக கள ஆய்வில் இறங்கினார்கள்.

வருவாய் துறை காவல்துறை மருத்துவத்துறை ஆகிய அலுவலர்கள் பணியாளர்களை அந்தந்த பகுதிகளில் இறங்கி தீவிரமாக பணியாற்ற வைத்தார்கள். இந்த வைரஸ் தொற்று உறுதியானவர்கள் வசித்த பகுதிகளை இரவோடு இரவாக தனிமை படுத்தினார்கள். அங்கு வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாக கூறியதோடு அவர்கள் யாரும் வேறு பகுதிக்கு செல்லாமல் அதேபோல் வெளிநபர்கள் யாரும் அந்தப் பகுதிகளுக்கு நுழையாமல் காவல்துறை மிகவும் கூர்மையாக பார்த்துக் கொண்டது. 

அதேபோல் அங்கு வசித்த மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவ பரிசோதனையில் இறங்கியது மருத்துவக்குழு. வீடுவீடாக நேரடியாக சென்று சளி, காய்ச்சல் இருப்பவர்களை கண்டறிந்த தோடு ரத்த மாதிரிகள் எடுக்கும் ஆய்வுகள் நடத்தினார்கள் மருத்துவக்குழுவினர். தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் ஏறக்குறைய 13 பகுதிகளை தனிமைப்படுத்தி ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டனர். 

சுமார் ஒரு மாத காலமாக அவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியே வராமல் இந்த மூன்று துறையினரும் பார்த்துக்கொண்டனர். அதேபோல் புதிதாக வைரஸ் தொற்று ஊடுருவக்கூடாது என்பதை மாவட்ட எல்லையில் காவல்துறை மற்றும் மருத்துவத் துறை அலுவலர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். 

அப்படி காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். இப்படி ஒவ்வொருநாளும் மூன்று அதிகாரிகளின் உழைப்பும் இந்தத் துறையில் உள்ள அலுவலர்கள் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களின் அர்ப்பணிப்பான செயல்பாடுகள் தொடர்ந்து வைரஸ் தொற்று பரவாமல் தடுத்து நிறுத்தி வந்தது. 

இதன் தொடர்ச்சியாக 70 நபர்களுக்கு மேல் யாருக்கும் கரோனா இல்லை என்ற நிலை கடந்த 14 நாட்களாக நீடித்து வந்தது. இங்கு சிகிச்சையில் இருந்த வைரஸ் தொற்று உடையவர்கள் சிகிச்சை முடித்து எவ்வொரு குழுவாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மொத்தம் 70 பேரில் ஒரே ஒரு நபர் வயதானவர் அவர் மட்டும் இறந்தார். மீதி 69 பேரில் இதுவரை வீட்டுக்கு சென்றவர்கள் 65 பேர் மீதமுள்ள நான்கு பேரும் அவர்களின் சிகிச்சைக்காலம் முடிவுற்று இன்று 28ந் தேதி அந்த நான்கு பேரையும் அதிகாரிகள் பணியாளர்கள் எல்லோரும் இணைந்து பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்ட 70 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று மாலை முதல் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரஸ் தொற்று உடைய எந்த நபரும் இல்லை என்ற நிலை வந்துள்ளது. ஏற்கனவே தாய்லாந்திலிருந்து வந்திருந்த ஆறுபேரும் அவர்கள் நீதிமன்ற காவல் அடிப்படையில் 27 ந் தேதி  இரவே சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தற்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. எந்த வைரஸ் தொற்று மிக தீவிரமாக ஈரோட்டை அச்சுறுத்தி ஆர்ப்பரித்ததோ அந்த வைரஸ் தொற்றை உழைப்பின் மூலம் அதிகாரிகளும், பணியாளர்களும், ஊழியர்களும் இணைந்து விரட்டி உள்ளார்கள். இதில் மூன்று அதிகாரிகளும் சாதனை படைத்த ஹீரோக்களாக உள்ளார்கள். ஈரோட்டில் தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலும் அதிக நபர்களுக்கு ஏற்பட்டதில் இறப்பு என்பது பெரிய அளவில் இல்லாமல் முழுமையாக எல்லோரும் குணம் பெற்று வீட்டுக்கு அனுப்பியதோடு, இந்த வைரஸ் தொற்று இனி இங்கு யாருக்கும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் முதன்முதலாக ஈரோடு அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்ட அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உயர் அதிகாரிகள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்