தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சி. கொத்தங்குடி ஊராட்சியில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காக்கும் விதமாக தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நவீன கருவிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேணுகோபால் துவக்கிவைத்து கிருமி நாசினி மருந்துகளை அடித்தார்.
சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு 50மீ தூரத்தில் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி உள்ளது. இங்கு கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மருத்துவ கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்த கோவை மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையொட்டி, கொத்தங்குடி ஊராட்சியில் மாணவி தங்கியிருந்த முத்தையாநகர் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தடுப்புகட்டைகள் மூலம் அடைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய பொருட்கள் வீட்டிற்கே சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.