தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தொடர்ந்து நாளுக்கு நாள் நோய் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு இன்றுமுதல் (10.05.2021) வருகிற 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தி இருந்தாலும், காலை 8 மணி முதல் 12 மணிவரையிலான அத்தியாவசியத் தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியே வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் நோய்த் தொற்று அதிகாமக இருக்கக்கூடிய 14 மாவட்டங்களைக் கண்காணிக்க தமிழக அரசு அமைச்சர்களை நியமித்துள்ளது.
அதில் திருச்சி மாவட்டத்தை முழுமையாக கண்காணிக்கவும், தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மருந்துகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் நிலை என அனைத்தையும் கண்காணித்து, உரிய முறையில் மக்களைக் காப்பாற்ற அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரையும் திருச்சி மாவட்டக் கண்காணிப்பாளர்களாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.