திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வந்தாரை வாழவைக்கும் சென்னை' என்று பெயர் பெற்ற மாநகரத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மனம் வெந்து நொந்து, தங்கள் ஊர்களை நோக்கிப் பயணப்படுகிறார்கள் என்றால், அதற்கு கரோனா பீதி மட்டுமே காரணமல்ல, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் எதையும் செய்ய முன்வரவில்லை, அநியாயமாகக் கைவிட்டுவிட்டதே என்ற சோகத்திலும், விரக்தியிலும்தான் புறப்பட்டுச் செல்கிறார்கள். இந்த மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையா இல்லையா? வாழ்க்கை விரட்டுகிறது, அத்தோடு சேர்ந்து அரசாங்கமும் மேலும் விரட்டுகிறது என்றால், மக்கள் என்ன செய்வார்கள்?
முதல்வர் நாற்காலி, அமைச்சரவை, அரசாங்கம், நிதிக்கருவூலம், கோட்டை என அத்தனையையும் வைத்திருக்கும் முதலமைச்சர் பழனிசாமிதானே இம்மக்களைக் காக்க வேண்டும்? வேறு யாரையாவது அவர் கைகாட்டிவிட்டு, கண் காணாத இடத்திற்குப் போய் ஒளிந்து கொள்ள முடியுமா?
கரோனா பரவி தினமும் 2000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், தினமும் ஏறத்தாழ 50 பேர் அளவுக்கு இறந்து கொண்டு இருக்கிறார்கள். சென்னையில் அதிகம் பரவி வந்த தொற்று, கடந்த ஒரு வாரமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனைத் தடுப்பதற்கு வழியற்ற முதலமைச்சர் பழனிசாமி, கோவைக்கும், திருச்சிக்கும் பயணமாகிறார். குடிமராமத்துப் பணிகளைப் பார்வையிடவும், இதர கட்டுமானப் பணிகளைப் பார்வையிடவும் செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதயம் மரத்து, இரக்கமற்ற தன்மை தலைக்கேறி, எடுத்தேன் கவிழ்த்தேன் எனும் எதேச்சதிகாரம் பெருகி வருவதையே இது காட்டுகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களே! தமிழ்நாட்டு மக்கள் இப்போது இருப்பது மருத்துவ நிபுணர்கள் சொல்லும் 'கோல்டன் பீரியட்' ஆகும். இதில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். உங்களது அலட்சியத்தால், அக்கறை இன்மையால், தன்னிச்சையான அணுகுமுறையால், இந்த 90 நாட்களையும் வீணடித்தது போல, இனியும் வீணடித்து, மக்களை வேதனை வலைக்குள் வீழ்த்தி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கரோனா பேரழிவில் இருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்; வாழ்வியல் பேரிடரில் இருந்து மக்களை மீட்டுத்தாருங்கள்! காலம் உங்களுக்கு இட்டிருக்கும் கடமையிலிருந்து எப்படியாவது தப்பித்து நழுவி விடலாம் என்று கற்பனையிலும் நினைக்காதீர்கள்!” என்று கூறியுள்ளார்.