திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கிரிவலம் என்பது தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. அண்ணாமலையார் கோவில் பின்புறமுள்ள மலையை அண்ணாமலையாராக நினைத்து 14 கி.மீ தூரத்தை பக்தர்கள் வலம் வருகின்றனர். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தாலும், ஒவ்வொரு பௌர்ணமியன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வார விடுமுறை நாட்கள், பௌர்ணமி நாள், பண்டிகை நாட்களில் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு பக்தர்கள் வாகனங்களில் வந்து குவிவதால் அண்ணாமலையார் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்ய குறைந்தது 4 மணி நேரம் ஆகிவிடுகிறது. சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் செல்லும் பக்தர்கள் கால்வலி ஏற்பட்டால் கூட எங்கும் உட்காரகூட முடியாது. கழிவறைக்கு போக வேண்டும் என அவசரமாக வரிசையில் இருந்து வெளியே வந்தால் கோவிலுக்கு வெளியே வரவேண்டும், அதன்பின் உள்ளே செல்ல முடியாது. இதனால் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் 4 மணி நேரம் சிறுநீரை கூட அடக்கிக்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதால் நொந்து போகின்றனர். பக்தர்கள் கூட்டம், அதனால் சுவாமி தரிசனம் செய்ய தாமதம் என ஒற்றை வார்த்தையில் கோவில் நிர்வாகமும், காவல்துறையும் கூறுகிறது.
உண்மையான காரணம் அதுதானா?
அண்ணாமலையார் கோவிலுக்குள் செல்ல நான்கு வழிகள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுரம் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். விவரம் அறிந்த உள்ளுர் பக்தர்கள், முக்கிய விருந்தினர்கள், அரசுத்துறையை சேர்ந்த அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் அம்மணியம்மன் கோபுரம் வழியாக கோவிலுக்குள் செல்வார்கள். கோவில் ஊழியர்கள், அறநிலையத்துறையை சேர்ந்தவர்கள், கோவில் சிவாச்சாரியார்கள் அவர்களது குடும்பத்தார் பேகோபுரம் வழியாக உள்ளே செல்வார்கள். பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் பௌர்ணமி மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்குள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் போன்றவை கிடையாது.
பௌர்ணமியன்று வெளிமாநில, வெளி மாவட்ட பக்தர்கள் கிரிவலம் வருவதற்கு முன்பு அண்ணாமலையார் – உண்ணாமலையம்மனை தரிசனம் செய்துவிட வேண்டும் என வரிசையில் நிற்கிறார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்பார்கள்.
வரிசையில் காத்திருக்க முடியாதவர்கள் அல்லது விரும்பாதவர்கள் மாற்று வழி என்னவென பார்க்கிறார்கள். சிறப்பு தரிசனம் செய்ய விரும்புகிறவர்களை குறிவைத்து கோவிலுக்குள் அழைத்து செல்லவே புரோக்கர்கள் சிலர் உள்ளனர். பௌர்ணமி நாட்களில் ஆட்களின் எண்ணிக்கையை பொறுத்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வசூலித்து விடுவார்கள். அந்ததொகையில் கோவிலில் பணியாற்றும் சில சிவாச்சாரியர்களுக்கு, கோவில் அதிகாரிகளுக்கு பங்கு தந்துவிடுவார்கள்.
பேகோபுரம் வழி அல்லது அம்மணியம்மன் கோபுரம் வழியாக பணம் தந்த பக்தர்களை உள்ளே அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்து, வெளியே அழைத்துவந்து விட்டுவிடுவார்கள். இது பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிக்கும் தெரியும் ஆனால் கண்டுக்கொள்வதில்லை. அதற்கு காரணம், மற்ற நாட்களைவிட பௌர்ணமி நாட்களில் காவல்துறையில் உள்ள உயர்அதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என பெரும் பட்டாளமே ஒவ்வொரு பௌர்ணமிக்கும் வருகின்றனர். அவர்கள் புறப்படும்போதே மாவட்ட காவல்துறைக்கு தகவல் அனுப்பிவிடுகிறார்கள். அவர்களின் வாகனங்களை நகர எல்லையில் இருந்து எந்த சிக்கலும் இல்லாமல் அழைத்துவந்து ஹோட்டல்களில் தங்கவைத்து பின்பு அம்மணியம்மன் கோபுரம் வழியாக கோவிலுக்குள் அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைக்கின்றனர்.
மாவட்டத்தில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் எஸ்.பியின் கவனத்துக்கு கொண்டுசெல்வதே எஸ்.பி தனிப்பிரிவின் பணி. இதற்காக இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒருபெரிய டீமே பணியாற்றுகிறது. ஒவ்வொரு காவல்நிலையத்திலும் காவல்நிலைய எல்லையில் நடக்கும் சம்பவங்கள், காவல்நிலையத்துக்கு வரும் புகார்கள், அதனால் வரும் பிரச்சனைகள், காவல்நிலையத்தில் நடக்கும் தவறுகளை எஸ்.பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலமாக எஸ்.பியின் கவனத்துக்கு கொண்டு செல்கின்றனர். இதற்காக இவர்கள் 24 மணி நேரமும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஆனால், திருவண்ணாமலை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்கள் அம்மணியம்மன் கோபுரம், கொடிமரம், பேகோபுரம் முன்பு நின்றுக்கொண்டு அதிகாரிகளின் நண்பர்கள், குடும்பத்தினர், உறவினர்களை கோவிலுக்குள் அழைத்து செல்லும் வேலையை மட்டுமே செய்கின்றனர்.
தாங்கள் அழைத்துவருபவர்களை சிறப்பாக தரிசனம் செய்யவைக்க வேண்டும் என்றால் கோவில் நிர்வாகம் மற்றும் சிவாச்சாரியர்களின் ஒத்தொழைப்பு தேவை என்பதால் அவர்களின் விவகாரத்தை காவல்துறை கண்டுக்கொள்வதில்லை. காவல்துறையினர் அழைத்துவருபவர்களை அறநிலையத்துறை ஊழியர்கள் கண்டுக்கொள்வதில்லை. இந்த இரண்டு தரப்பினர் வரிசையில் நிற்காமல் தனி வழியில் சுவாமி தரிசனத்துக்கு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை அழைத்து செல்லும்போது, பொதுதரிசன வழியில் எந்த சிபாரிசும் இல்லாமல் வரும் பக்தர்களை நிறுத்தி விடுகின்றனர். இதனாலயே பலமணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சிபாரிசோடு வருபவர்கள் சில நிமிடங்களில் தரிசனம் முடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள் என்கிறார்கள் கோவில் அறங்காவலர் குழுவை சேர்ந்தவர்கள்.
புரட்டாசி மாத பௌர்ணமி, காலாண்டு விடுமுறை மற்றும் வார இறுதிநாளான 9.10.2022 ஆம் தேதி வந்ததால் கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் கூட்டத்தில் திருவண்ணாமலை நகரம் நிரம்பி வழிகிறது. கோவிலுக்குள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் எடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உட்பட அதிகாரிகள் 9.10.2022ஆம் தேதி மாலை கோவிலுக்குள் ஆய்வுக்கு சென்றவர்கள், பக்தர்கள் விரைந்து சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தரிசன வழி மாற்றிவிட்டனர், வரிசையில் வந்த பக்தர்களிடம் குறைகளை கேட்டனர். பின்னர் கிரிவலப்பாதையில் சைக்களிலேயே சென்று ஆய்வு செய்தனர்.
இதுவும் சர்ச்சையாகி உள்ளது, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் தாமதம் எதனால் என்பது தெரிந்தும் தெரியாதது போல நடந்துக்கொண்டது சரியா? உள்ளே ஆய்வு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புவரை எஸ்.பி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் தனிப்பிரிவு போலீசார், அம்மணி அம்மன் கோபுரம் வழியாக தங்களது உயர் அதிகாரிகளின் நண்பர்கள், அவர்களது குடும்பத்தினரை உள்ளே அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்யவைத்தனர் என்கிறார்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.
அடுத்தமாதம் கார்த்திகை மாத தீபத்திருவிழா திருவண்ணாமலையில் கோலாகலமாக நடக்கவுள்ளது. 'பௌர்ணமி நாளிலேயே பக்தர்களை இந்தளவுக்கு வதைக்கும் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, 12 நாள் திருவிழாவில் பக்தர்களை எந்தளவுக்கு வாட்டி வதைக்க போறாங்கன்னு தெரியல' என அச்சம் தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.