தமிழக அரசின் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என குறிப்பிடப்பட்டிருப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது. நாட்டில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. தேசிய மொழி, ஆட்சி மொழி என எதுவும் குறிப்பிடப்படாமல் இருக்கும் நிலையில் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் 210 வது பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு வரலாற்று ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது வளரும் இளம் தலைமுறையினரிடையே தவறான கண்ணோட்டத்தை உருவாக்கிவிடும் என்பதால் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஏற்கனவே பாடப்புத்தகத்தின் முகப்பு அட்டைப் படத்தில் பாரதியார் தலைப்பாகை காவி நிறத்தில் இருந்ததற்கு சர்ச்சைகள் எழுந்த நிலையில் புதிதாக இந்தி ஆட்சி மொழி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.