சிஐடியு-பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கைகள், “மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவித்த தினக்கூலி ரூபாய் 580 வழங்கிட வேண்டும்; நிலுவை தொகையுடன் வழங்கிட வேண்டும். ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த இ.பி.எஃப், இ.எஸ்.ஐ, இன்சுரன்ஸ் திட்டத்திற்கு விவரங்கள் வழங்கிட வேண்டும்.
கடந்த ஒப்பந்த காலங்கள் மற்றும் தற்போதுள்ள ஒப்பந்த காலங்களில் செலுத்தப்பட வேண்டிய EPF தொகையை முழுமையாக செலுத்த வேண்டும். கடந்த ஒப்பந்தத்தில் செலுத்தப்படாத EPF தொகையை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். கரோனா காலத்தில் தூய்மை காவலர்களுக்கென்று அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இ.எஸ்.ஐ. திட்டத்திற்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.
பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கிட வேண்டும். குப்பைகளைக் கொட்ட இடம் ஒதுக்கித் தர வேண்டும். தொழிற்சங்கம் துவக்கியதற்காக வாய்மொழியாக வேலை நீக்கம் செய்யப்பட்ட கலைச்செல்வனுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பயோ கேஸ் பிளாண்ட்டில் பணிபுரிந்து, உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்த தொழிலாளர்கள் ராமர், மருதவீரன் ஆகியோரின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.