தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி இரவு நேரத்தில் கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் மரணமடைந்தனர். 'சாத்தான்குளம் சம்பவம்' என தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர்ந்து வழக்குகள் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்தக் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி சிபிஐ புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது காவல் அதிகாரிகள் மீது 120 பி (கூட்டுச்சதி) மற்றும் விடுபட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஐ சேர்ந்த ஏடிஎஸ்பி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் 'சாத்தான் குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு சிறப்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் ஒன்பது பேர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கானது மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த வழக்கில் இரண்டு குற்றப் பத்திரிகைகளை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுப் பதிவின்போது ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீதும் குற்றப்பிரிவு 120பி (கூட்டுச்சதிக்கான) பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய கீழமை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனு விசாரணை செய்து நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தப் பிரிவில் குற்றம் நிகழ்ந்ததற்குப் போதிய ஆதாரங்கள் இருப்பதாலும், குற்றவாளிகள் அனைவரும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே உரிய குற்றப் பிரிவுகளில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யாதது, விசாரணை இறுதியில் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே ஸ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான வழக்குப் பிரிவுகளில் கூட்டுச்சதிக்கான பிரிவிலும் மற்றும் விடுபட்ட பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய அனுமதி வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு, நீதிபதி இளங்கோ முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் சிறையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜரானார். அப்பொழுது 'இந்த வழக்கில் போதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது எனவே மேலும் பிரிவுகளைச் சேர்க்க அனுமதிக்கக் கூடாது என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும்' என சிபிஐ தரப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.