தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்வதற்கு வசதியாக அதிமுக, திமுக, அ.ம.மு.க. கட்சிகள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளிலும், வாக்காளர் பட்டியலில் தங்களது கட்சி வாக்குகளை சரிபார்ப்பதிலும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதிலும் சுறுசுறுப்பு காட்டி வருகின்றன.
அந்தப் பட்டியலில் காங்கிரசும் தற்போது இணைந்துள்ளது. 23.09.2018 காலை 6.30. மணி முதல் சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், காங்கிரஸ் நிர்வாகிகளோடு நடைபயிற்சி மேற்கொண்டார்.
சிவஞானம் பூங்காவில் தொடங்கி 54வது வட்டம் முழுவதும் நடந்தபடியே அங்குள்ள மக்களையும், கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் மறைந்த ஆறுமுகம், முன்னாள் கவுன்சிலர் மஸ்தான் உள்ளிட்ட தொண்டர்களின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்தார்.
வாக்காளர்கள் 15000க்கும் மேற்பட்டவர்களை நீக்கம் செய்திருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவல்கள் சிவராஜசேகரனுக்கு அதிர்ச்சியளித்தது.
அதைத் தொடர்ந்து வாக்காளர் பெயர் திருத்தம், சேர்த்தல் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் காங்கிரஸ் சார்பிலும் பங்கேற்றனர். பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு பணியிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் தனியாக மேஜை நாற்காலி, டேபிள் போட்டு ஈடுபட்டனர்.
இதனை கவனித்த திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகிவிட்டதா? அவர்கள் ஏன் தனி ஆவர்த்தனம் செய்ய வேண்டும்? என குழம்பிப்போனார்கள்.
உடனே அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம், "திமுக கூட்டணியில் நீங்கள் இல்லையா?" என திமுகவினர் கேள்வி கேட்டு விட்டு நகர்ந்துவிட்டனர்.
உடனே மாவட்ட தலைவர் சிவராஜசேகரனை தொடர்புகொண்டு திமுகவினரின் சந்தேகத்தை தெரிவிக்க, "அப்படியெல்லாம் இல்லை. திமுகவினரோடு இணைந்து பணிகளை மேற்கொள்ளுங்கள்" என காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து துறைமுகம் பகுதியில் திமுகவினருடன் இணைந்து பூத் கமிட்டி பணிகளில் ஈடுபட்டனர் காங்கிரஸ் நிர்வாகிகள். திமுக நிர்வாகிகளும் இப்பணியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தோழமையோடு கலந்துரையாடினர். பூத் கமிட்டி அமைத்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்தலில் காங்கிரஸார் ஈடுபட்டிருப்பது கதர் சட்டையினருக்கு உற்சாகத்தை தந்துள்ளது என்கிறது சத்தியமூர்த்திபவன்.