சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வத்தாமன். 35 வயது மதிக்கத்தக்க இவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில், மாணவர் காங்கிரஸின் தலைவராக பதவி வகித்து வந்த அஸ்வத்தாமன், அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் முதன்மைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், அஸ்வத்தாமனின் கூட்டாளிகள் கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற தொழிலதிபரைத் துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவர் பணம் கொடுக்காததால், ஜெயப்பிரகாஷைக் கடத்திய அஸ்வத்தாமனின் கூட்டாளிகள் அவரிடம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் அஸ்வத்தாமன் மீது புகார் அளித்திருந்தார். அதன் பேரில், அந்தப் புகாரை எடுத்துக் கொண்ட போலீசார் தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்தனர். இந்நிலையில், போலீசார் விசாரணை தொடங்கியவுடன் அஸ்வத்தாமன் பெங்களூரில் தலைமறைவாக இருந்துள்ளார். இத்தகைய சூழலில், அஸ்வத்தாமன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு காரில் வந்துகொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அஸ்வத்தாமன் பூந்தமல்லி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட நசரத்பேட்டைக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு தயாராக இருந்த போலீசார் அஸ்வத்தாமனை கையும் களவுமாகப் பிடித்தனர். அப்போது, போலீசாரிடம் சிக்கிய அஸ்வத்தாமனை சோதனை செய்தபோது, அவரிடம் இருந்த நவீன வகை துப்பாக்கியையும், 7 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர்.
அதன்பிறகு, அஸ்வத்தாமனைக் கைது செய்த போலீசார் அவரை முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு, மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்திய பிறகு, அஸ்வத்தாமன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதே சமயம், கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமன் வடசென்னையை ஆட்டிப்படைத்த பிரபல ரவுடியான நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, மிரட்டல் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், சென்னை மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.