அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் கலந்து கொண்டார். அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பற்றி அவதூறாகப் பேசியதாக செல்லபாண்டியன் மீது திமுக சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் செல்லபாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "முதலமைச்சர் குறித்து இனி அவதூறாக பேசமாட்டேன்" என செல்லபாண்டியன் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 15 நாட்களுக்கு விளாத்திகுளம் போலீசில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதித்து செல்லபாண்டியனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.