கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு சிறுபாக்கம், புதூர், அரசங்குடி, கொத்தனூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் தங்களது நெல்மணிகளை விற்பனை செய்து வருகின்றனர். அங்கு வேப்பூர் வட்டம், பிஞ்சனூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதம்பி மகன் ராமசந்திரன்(44) என்பவர் தற்காலிக பட்டியல் எழுத்தராகவும், சிதம்பரம் வட்டம், பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்த அப்புகுஞ்சி மகன் கிருஷ்ணசாமி(45) என்பவர் லோடு மேனாகவும் பணிபுரிந்து வந்தனர். இருவரும் நெல் கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளிடம் லஞ்சமாக மூட்டைக்கு ரூபாய் 30 முதல் 50 ரூபாய் வரை பணம் வசூல் செய்வதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் அருகேயுள்ள எஸ்.புதூரை சேர்ந்த தெய்வீகராசு மகன் அழகுவேல்(43) என்ற விவசாயி தன்னுடைய நெல் மூட்டைகளை விற்பதற்காக இணையத்தில் பதிவு செய்தார். அவருக்கு மார்ச் 12ஆம் தேதி நெல் கொள்முதல் செய்ய டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனாலும் நெல் கொள்முதல் செய்யாமல் பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் அலைக்கழித்துள்ளார். மேலும் நெல் மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் 200 மூட்டைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச பணத்தை கொடுக்க விரும்பாத அழகுவேல் இதுகுறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரைப்படி சிறுபாக்கத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக நேற்று முன்தினம் நெல் மூட்டைகளை கொண்டு சென்றார். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைப்படி ரசாயனப் பொடி தடவிய ரூபாய் 10 ஆயிரத்தையும் அழகுவேல் எடுத்து சென்றார். அவருக்கு உதவியாக மூட்டைகளை ஏற்றி இறக்கும் விவசாயிகள் போல் மாறுவேடத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரும் சென்றனர்.
அப்போது அங்கிருந்த பட்டியல் எழுத்தர் ராமச்சந்திரன் கூறியபடி லோடுமேன் கிருஷ்ணசாமியிடம் அந்த ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கினார். லோடுமேன் கிருஷ்ணசாமி பெற்று, ராமச்சந்திரனிடம் வழங்கியுள்ளார். அப்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அவர்கள் 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து, கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத 15,000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பல்வேறு காரணங்களுக்காக நெல் மூட்டைகளுக்கு 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.