திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியானது விவசாயம் சார்ந்த பகுதியாகும். இங்கு பெரும்பாலானோர் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்டச் செயலாளருமான சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "எனது ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து, மானாவாரியாகக் கடந்த 50 நாட்களுக்கு முன்பு மக்காச்சோளம், வெள்ளை சோளம், பருத்தி, கடலை மற்றும் அனைத்துப் பயிர்களும் அதிகளவில் பயிரிட்டனர். இந்த நிலையில், பருவ மழையின்மை காரணமாக ஒட்டன்சத்திரம் தொகுதியில், கடந்த 50 நாட்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட மக்காச்சோள விதைகள் முற்றிலும் காய்ந்து விட்டது. இதனால் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுவிட்டதாக மிகவும் வேதனையில் உள்ளனர்.
இதுபோல் ஒட்டன்சத்திரம் தொகுதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 17,500 ஏக்கர் மக்காச்சோள பயிர்களும், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 9,000 ஏக்கர் மக்காச்சோள பயிர்களும், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 7,000 ஏக்கர் மக்காச்சோள பயிர்களும் மழையின்மையால் காய்ந்துவிட்டது. விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களை வேளாண்மைத்துறை அலுவலா்களுடன் நேரில் வந்து ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் விவசாயப் பயிர்களை, பிரதம மந்திரி பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கும் உதவி செய்யக் கோரி" அந்த கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.