மத்திய பா.ஜ.க.மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், ரயில்வே துறை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், மின்சார திருத்த சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை போன்ற மக்கள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் ஒவ்வொரு ஊரிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று ஈரோடு பஸ்நிலையம் அருகே சத்தி ரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வேளாண் மசோதா சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், ரயில்வே தனியார்மயம் ஆவதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மறியல் போராட்டத்தில் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜன், மாவட்ட பொருளாளர் எஸ்.டி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் மகாலிங்கம், வட்டார செயலாளர் சோமசுந்தரம் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பா.ஜ.க. மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பியவாறு சக்தி ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதேபோன்று பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, சிவகிரி, பவானி, கோபி, சத்தியமங்கலம் என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மறியல் போராட்டம் நடந்தது. அதேபோல சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி என மாநிலம் முழுக்க கம்யூனிஸ்ட் கட்சியினரின் மறியல் போராட்டம் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஆங்காங்கே கைதான கட்சியினர், மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.