சமூக வலைதளங்களில் டிக் டாக் என்ற பெயரில் அத்துமீறல்கள் பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. பொது இடங்களில் நின்று டிக் டாக் செய்வது போன்ற செயல்கள் பொதுமக்களை வேதனைப்படவும் வைக்கிறது.
இந்தநிலையில்தான் புதுக்கோட்டை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் ஒரு இளைஞர் கத்திக் கொண்டு ஓடுவதும், நடந்து செல்வோரை ஓடிப் போய் பயமுறுத்துவது, முதியவர்களிடம் அவமரியாதையாக நடந்து கொள்வது, அத்துமீறி செயல்படுவது போன்ற வீடியோ பதிவுகள் வெளியாகி பொதுமக்களிடம் விவாதமானது.
இந்த நிலையில் இது போன்ற டிக் டாக் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமாரிடம் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையையடுத்து வேகமாக செயல்பட்ட மாவட்ட காவல்துறை தனியார் பாலிடெக்னிக் மாணரை கைது செய்துள்ளனர். அதாவது.. அந்த மாணவரின் டிக் டாக் ஐ.டி மூலம் அவரது முகவரியை தேடிய போது புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி அருகில் உள்ள கருக்காக்குறிச்சி வடதெரு ராஜாகுடியிருப்பு பகுதியை சேர்ந்ததிருமேனி மகன் கண்ணன் என்பதை கண்டறிந்து அவரை வடகாடு போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக டிக் டாக் செய்த கல்லூரி மாணவரை உடனடியாக கைது செய்திருப்பதை பார்த்து நடவடிக்கை எடுக்க கோரியவர்கள் மாவட்ட காவல் துறையை பாராட்டியுள்ளனர்.