பள்ளியை சீரமைக்க கோரி 1ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் மனு
படிக்கும் பள்ளியை சீரமைக்க கோரி 1ம் வகுப்பு மாணவி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்து முறையிட்டதால் குறைதீர்நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் பெரிய ஆலம்பட்டிபுதூரில் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளியில் படிக்கும் 1ம் வகுப்பு மாணவி சாமு, நேற்று தேர்வு எழுதிய கையோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது தந்தை ராமச்சந்திரனுடன் வந்து மனு அளித்தார். அதில் கூறியிருந்ததாவது: ஆலம்பட்டிபுதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறேன். என் வகுப்பில் 14 மாணவர்களும், 13 மாணவிகளும் படித்து வருகிறார்கள். பள்ளியின் மேற்கூரை பழுதடைந்த நிலையில், தற்போது மழை பெய்து வருவதால் வகுப்பின் மேற்கூரை தண்ணீரில் ஊறி மழைநீர் வகுப்பு அறைக்குள் விழுகிறது. இதனால் வகுப்பறைக்குள் பாடப் புத்தகங்களை வைத்து படிக்கவோ, எழுதவோ முடியவில்லை.
கனமழை வந்தால் பள்ளியின் மேற்கூரை 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவ, மாணவியரின் தலையில் விழும் அபாய நிலை உள்ளது. மழை நேரத்தில் வகுப்பறைகளின் சுவரில் மின்சாரம் பாய்கிறது. இதனால் எந்நேரத்திலும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கலெக்டர் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளேன். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளியை உடனே சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.