Skip to main content

கோவை சிறுமி வன்கொடுமை- சந்தோஷ்குமார் குற்றவாளி!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 1- ஆம் வகுப்பு படித்து வந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25- ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போனார். அடுத்த நாளான 26- ஆம் தேதி வீட்டின் எதிரே உள்ள வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கோவையில் பல இடங்களில் போராட்டமும் நடைபெற்றது.
 

பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு எதிரே மனைவியை பிரிந்து பாட்டி வீட்டில் வசித்து வந்த தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை 31- ஆம் தேதி கைது செய்தனர். 

coimbatore special court child incident case judgement



இதுதொடர்பான வழக்கை கோவை மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. கடந்த 16- ஆம் தேதி அரசுத்தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், எதிர்தரப்பு இறுதி வாதம் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
 

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு 27- ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதி ராதிகா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ்குமாரை குற்றவாளி என கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கான தண்டனையை இன்று (27.12.2019) பிற்பகல் 03.00 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 
 

இதனிடையே சிறுமி கொலையில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாக தாயார் தொடர்ந்த மனு விசாரிக்கப்பட்டு வருகிறது.


 

சார்ந்த செய்திகள்