கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் பொட்டாசியம் நைட்ரேட், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 109 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், கார் வெடிப்புக்கு பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளசரின், சிவப்பு பாஸ்பரஸ், அலுமினியம் பவுடர், சல்பர் பவுடர், ஆணிகள் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேசா முபீன் வீட்டிலிருந்து துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 5 பேர் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவரான ஃபிரோஸ், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் இலங்கை தேவாலயத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், என்பவரையும் ரஷீத் அலி என்பவரையும் கேரள சிறையில் சந்தித்ததை ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் கூடுதல் தகவலாக உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வசித்த அப்துல் மஜித் என்பவரின் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு ஜமேசா முபீன் வாடகைக்கு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் ஒருவரான முகமது அசாருதீன், முபீனின் உறவினர் என்பதும் தெரிய வந்துள்ளது.