தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தானே புயல், கஜா புயல், ஒக்கி புயல் என பல புயல்களால் லட்ச கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து தேங்காய் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. தஞ்சை, பேராவூரணி, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை உற்பத்தியானது செய்யப்பட்டு வரும்நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.40, 50 என்று விற்பனை செய்யப்பட்டது. அதற்கு காரணம் தேங்காய் உற்பத்தி முழுவதும் சரிந்துபோனதால் இந்த விலையேற்றம்.
ஆனால் கடந்த ஆண்டு தேங்காய் நல்ல உற்பத்தியை எட்டியநிலையில், தென்னை மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து, விவசாயிகள் தேய்காய் சாகுபடி செய்து இதற்கு முன் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட முயன்ற நிலையில், கடந்த 2020ல் கரோனா நோய் தாக்கம் மிகப்பெரிய அளவில் தேங்காய் உற்பத்தியாளா்களுக்கான வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்தது. கரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கு மற்றும் பொது முடக்கங்களால், திருமணம் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள், சிறிய அளவில் இருந்து பெரிய அளவிலான உணவகங்கள் வரை அனைத்தும் முடங்கியதால் தேங்காய் விற்பனை முற்றிலும் நலிவடைந்தது.
தமிழக அரசானது கடந்த 6 மாத காலங்களாக கொஞ்சம் கொஞ்கமாக அறிவித்த சில தளா்வுகளால் உணவகங்கள் முழுமையாக திறக்கப்பட்டது. எனவே தேங்காய்க்கு ஒரு நல்ல விலை கிடைத்தது. ஒரு தேங்காய் 20 முதல் 25 வரையிலான விலை அவா்களுக்கு திருப்தி அளித்தது. கடந்த 6 மாத காலமாக தேங்காய்க்கு ஒரு நல்ல விலை கிடைத்து கொண்டடிருந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை வீச ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் 2வது அலை வீச ஆரம்பித்து அசுர வேகத்தில் நோய் தொற்று பரவி வரும் நிலையில், மீண்டும் தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அரசும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், தற்போது தேங்காயின் விலை சரிவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. ஒரு தேங்காய் இன்று ரூ.12 அல்லது 10 ரூபாய்க்கு குறைந்துள்ள நிலையில், உற்பத்தியாளா்களும் பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளனா். உற்பத்தி அதிகம் இருந்தும் ஒருவிலை கிடைக்காமல் தொடர்ந்து 3 வது வருடமாக இந்த விலை வீழ்ச்சியையும், வாழ்வாதாரமும் கேள்விகுறியாகி உள்ளது. எனவே அரசு விவசாய உற்பத்தி பொருட்களை நல்ல விலை நிர்ணயம் செய்து வாங்கிகொள்ள வேண்டும் என்றும்,உள் நாட்டு ஏற்றுமதிக்கு கட்டுபாடுகள் இல்லாமல் கொண்டசெல்ல உதவிட வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றனா்.