தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் நேற்று துவங்கிய திமுக அரசின் சட்டமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாளான இன்று (22.6.2021) முக்கியப் பிரமுகர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அண்மையில் மறைந்த பிரபல எழுத்தாளர் கி. ராஜநாராயணன், துளசி அய்யா வாண்டையார், நடிகர் விவேக், முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன், இந்திய நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு தமிழ்நாடு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
இந்த இரங்கல் தீர்மானத்தில் பெரியாரின் பெருந்தொண்டர் அய்யா ஆனைமுத்து அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது பெரியாரிஸ்டுகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அய்யா ஆனைமுத்து அவர்கள் அண்மையில் மறைந்தார். அவரது மறைவையொட்டி அப்போது இரங்கல் செய்தி வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், “பெரியாரிய சிந்தனையாளரான அய்யா ஆனைமுத்து, தந்தை பெரியாரின் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, பகுத்தறிவு - சமூகநீதி பாதையில் பயணித்து முதுமையிலும் பொதுத்தொண்டாற்றிய ஆனைமுத்து அவர்களின் மறைவு திராவிட இயக்கத்திற்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும். அய்யாவின் பெரும் பணியும், கருத்துக்களும் நிலைத்திருக்கும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அப்படிப்பட்ட பெரியாரின் பெருந்தொண்டரான ஆனைமுத்துவுக்கு சட்டமன்றத்தில் இரங்கல் தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்கிறார்கள் பெரியாரிய சிந்தனையாளர்கள்.