மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை ஒட்டி சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய மனுவுக்கு, திருவள்ளூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற விளையாட்டுகளுக்குத் தடை விதித்து, 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றியது. ஆனால், சேவல் சண்டைக்கு தடை நீடிக்கிறது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளை ஒட்டி, பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1-ம் தேதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள களாம்பாக்கம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்கும்படி, காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி, திருவள்ளூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கடந்த ஆண்டு சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். சேவல் சண்டை நடத்த அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து, சேவல் சண்டைக்கு அனுமதியும், காவல்துறை பாதுகாப்பும் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 17-ம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்க திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், திருவாலங்காடு ஆய்வாளருக்கும் உத்தரவிட்டுள்ளது.