காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 76) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல்களைத் தெரிவித்திருந்தார். அதோடு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு மலர்மாலை வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவித்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சென்னையில் இன்று (15.12.2024) மாலை அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்திற்கு இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் வருகை தந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவித்தார். அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், சு. முத்துசாமி எனப் பலரும் உடன் இருந்தனர்.