தேர்தல் நெருங்குவதால் கிடைக்கிற எந்த வாய்ப்பையும் கைவிட நினைக்கவில்லை முதல்வர் பழனிசாமி. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவராகக் காட்டும் விதமாகவே இருந்தது முதல்வர் பழனிசாமியின் நாகை, மயிலாடுதுறை விசிட்.
கடலூரில் வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், நாகை மாவட்டத்தைப் பார்வையிடுவதற்காக முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை இரவு வேளாங்கண்ணியில் தங்கினார். புதன்கிழமை, நாகூர் தர்கா குளம் பாதிக்கப்பட்டதைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்த அவர், காலை 8 மணிக்கு வேளாங்கண்ணி சர்ச்சுக்குச் சென்றார். அங்கு சர்ச் நிர்வாகத்தினர் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து அவருக்கு ஆசீர்வாதம் வழங்கினார்கள்.
அதனைத் தொடர்ந்து 8.30 மணி அளவில் நாகூர் தர்காவுக்குச் சென்ற முதல்வரை, தர்காவின் தலைவர்களும், நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் வரவேற்றனர். நாகூரைச் சேர்ந்த முஸ்லீம்கள் உள்பட அனைவரும் பெருமளவு கூடியிருந்தனர்.
நாகூர் தர்காவில் வெளிநாட்டுத் தலைவர்கள், டெல்லியிலிருந்து வரும் தலைவர்களுக்குக் கொடுக்கும் மரியாதையை முதல்வருக்கும் செய்தார்கள். தர்காவின் உட்பகுதிக்கே அழைத்துச் சென்ற தர்காவின் தலைவர்கள், நீங்கள் மீண்டும் முதல்வராக வெற்றிபெற்ற பின்னர், மீண்டும் இந்த தர்காவிற்கு வரவேண்டும் என்று கூறியபோது, அவசியம் வருகிறேன் என்ற முதல்வர், சிறிது நேரம் கண்மூடி பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் இருந்தனர்.
தர்கா குளத்தின் கரைகள் பாதிக்கப்பட்டிருந்ததைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் முழு விவரத்தையும் கேட்டார். பின்னர் காரில் ஏறியவுடன் வேலுமணியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் பழனிசாமி, பாதிக்கப்பட்ட தர்கா குளம் கரைகள் உள்பட எல்லாவற்றையும் முழுமையாக எவ்வளவு சீக்கிரம் சீரமைக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை சென்ற முதல்வர், தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றார். அங்கு அவருக்குப் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீன 27 -ஆவது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமியைச் சந்தித்து ஆசி பெற்றார்.