கடந்த 6 ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் கொடுத்த அறிவிப்பின்படி இன்று 8/1/2022 நீட் விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள 13 கட்சிகளில் பாஜகவை தவிர்த்து 12 கட்சிகளின் ஆதரவுடன் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்துக்கட்சி கூட்டத்தை முடித்துக்கொண்ட கையோடு ரேஷன் கடை ஒன்றில் புகுந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சர் துரைமுருகனும் இருந்தார். தீவுத்திடல் அருகே அன்னை சத்யா நகரில் உள்ள ரேஷன் கடையில் அவர் ஆய்வு செய்தார். அப்போது, ரேஷன் கடையில் பொருட்களை வாங்க பையோ மெட்ரிக் முறை பின்பற்றப்படும் நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் தற்பொழுது அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் அட்டையில் பெயருள்ள ஒருவர் வந்தாலே பொருட்களைக் கொடுக்க அறிவுறுத்தினார்.
பல இடங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்புகளை எடுத்து செல்ல பைகள் கொடுக்கப்படவில்லை என்ற புகார் இருந்த நிலையில் இன்று முதல்வர் ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.