சேலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்ததாக 17 தொழிற்சாலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடியாக இழுத்து மூடியுள்ளனர்.
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் (யூஸ் அன் த்ரோ) பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தவும், அதை விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இவ்வகை பொருள்களை தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், அதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதையடுத்து, சேலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குவளைகள், கைப்பை உள்ளிட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்ததாக 17 தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அரசு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்து வரும் தொழிற்சாலைகள் உடனடியாக மூடப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.