தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பணிகொண்டான் விடுதி ஊராட்சியில் கல்லனை கால்வாய் ஓரமாக முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென இரு டாஸ்மாக் கடைகளை கடந்த ஜூலை 7ந் தேதி திறந்தார்கள். அந்த பகுதியில் மாணவ மாணவிகள் அதிகம் செல்லும் பகுதி என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் முதல் டாஸ்மாக் நிர்வாகம் வரை மனு அளித்தும் அந்த மனுக்களை தூக்கி வீசிவிட்டு கடைகள் திறக்கப்பட்டதால் 9ந் தேதி காலை மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்ட சாலை மறியல் போராட்டம் நடந்தது.
சுமார் 3 மணி நேரம் நடந்த சாலை மறியல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி., செந்தில்குமார் போராடிய மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றுவதாக ஒப்புதல் அளித்து எழுதிக் கொடுத்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
டாஸ்மாக் கடைகள் அகற்றுவது தொடர்பான கோப்புகள் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் சென்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் அந்த கோப்பு பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. மேலும் வைத்திலிங்கம் எம்.பிக்கு வேண்டிய நபர் பார் நடத்துவதால் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அதனால் நிரந்தரமாக கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி 4 கிராம மக்களுடன் மாணவர்களும் மீண்டும் போராட்ம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி பணிக்கொண்டான் விடுதி, மேலஊரணிபுரம், கீழஊரணிபுரம் மற்றும் சிவவிடுதி கிராமத்தை சேர்ந்த அஇஅதிமுக நிர்வாகிகள் அஇஅதிமுக கிளை செயலாளர்கள் சி.மதியழகன், எம்.மார்க்கண்டன் பிரதிநிதிகள் எம்.சேகர், ஆர்.கார்த்திகேயன், ஆ.ஜெயக்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் பெண் உறுப்பினர்களும் தங்களின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்கள்.
மேலும் 500, க்கும் மேற்பட்டோர் தங்களின் அடைப்படை கட்சி உறுப்பினர் அட்டையையும், தாங்கள் அணிந்து வந்த வேஷ்டி, புடவைகளையும் 26ம் தேதி அன்று நடைபெறும் மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு சாலையில் தீ வைத்து கொழுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.