கோவிட்-19 பரவலால் உலகம் நெருக்கடியான காலகட்டத்திலிருக்கிறது, தொற்று விகிதங்கள் அன்றாடம் ஏறிக் கொண்டிருக்கின்றன. கரோனாவை கட்டுப்படுத்த அரசுகள் போராடிக் கொண்டிருக்கின்றன. தேசமே 50 நாட்களாக ஊரடங்கால் முடங்கிப் போயிருக்கிறது. இந்த சூழலில் கரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக மருத்துவர்களும், செவிலியர்களும் உயிரை பணயம் வைத்து பணியை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாகத் தூய்மை பணியாளர்களும் அன்றாடம் நகரை சுத்தம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் தினக்கூலி அடிப்படையில் பணியிலமர்த்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அன்றாடம் 300 கூலியாகத் தரப்படுகிறது. நாங்கள் நிரந்தரப் பணியாளர்களுக்கு ஈடாகப் பணி செய்து வருகிறோம். சம்பள வேறுபாடு வேண்டாம். அன்றாடம் கூலியாக 600 தாருங்கள் என்று கோரிக்கை வைத்தோம். கோரிக்கை நிறைவேறவில்லை என்கிறார் தென்காசி நகர துப்புரவு சங்கத் தலைவரான நாராயணன்.
இதனால் தூய்மை பணியாளர்கள் 600 ஊதியம் பிற உரிமைகளை கேட்டு தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தென்காசி மாவட்டத்தின், சங்கரன்கோவில், கடையநல்லூர், குற்றாலம் நகராட்சி, மற்றும் பேரூராட்சி உட்பட 18 இடங்களில் தூய்மை பணியாளர்கள், துப்புரவு வார்டு மற்றும் நகராட்சி பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் நாராயணன், சி.ஐ.டி.யு. நெல்லை தென்காசி மாவட்ட தலைவர் வேல்முருகன் ஆகியோர் பேசுகையில், தினக் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். அனைத்து தற்காலிக பணியாளர்களையும் நிரந்தரமாக்க வேண்டும். இதனை அரசு அறிவித்து இரட்டிப்பு சம்பளத்திற்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் போதிய பாதுகாப்பு உபரணங்களையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். காலை 7 மணியளவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.